உங்கள் வீட்டிற்கு அலுவலக மற்றும் வியாபாரம் போன்ற வேலைகளின் பளுவை, அழுத்தத்தை கோபமாக கொட்டாதீர்கள். அதனால் நிம்மதி இழந்து மேலும் மேலும் கோபமும் வெறுப்பும் வளரும். வெறுப்பைக் கொட்டினால் நெருப்பாய்ச் சுடும். அன்பைக் கொட்டினால் ஆசையாய் பெருகும்!
ஆம், நீங்கள் உங்கள் மனைவியிடத்தில் அன்பை செலுத்துங்கள். அன்புப் பெருகும். வம்புகள் குறையும். குறும்புகள் பெருகும். அது உங்கள் மன அமைதியை நிச்சயிக்கும். ஆயுளை அதிகரிக்கும். உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைத் தரும்.
ஆனால், இன்று பெரும்பாலான குடும்பங்களில் தம்பதிகளிடையே சச்சரவுகளும் கூச்சல்களும் அதிகமாகி வன்மம் வளர்ந்து நிற்கிறது. அதுவே அவர்களின் அழிவுக்கும் கூட காரணமாகிறது.
அமைதியற்ற சூழலால் அலுவலகத்தில் சரியாக பணி செய்ய முடியாது. வியாபாரத்தில் சரியாக இயங்க முடியாது. இதனால் மேலும் பிரச்சினைகள் பெருகி மன அழுத்தம் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். கூடவே செரிமாணமின்மை, தூக்கமின்மை, சர்க்கரை போன்ற வியாதிகளும் வந்து சேர்ந்து கொள்கிறது. இதனை நாம் வரவே விடாமல் தடுக்க முடியும். ஆம், அதற்கு ஒரு ஒரு குணத்தை நமக்குள் கட்டாயமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கணவனும் மனைவியும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அது "விட்டுக்கொடுத்தல்" என்னும் பெருந்தன்மையான குணம். இது ஆணிற்கும் பெண்ணிற்கம் அவசியம் வேண்டும். இந்த குணம் உங்கள் ஆற்றலை அதிகரிக்கும். அன்பை நிலைக்கச் செய்யும். குடும்பத்தை குதூகலப்படுத்தும்.
"விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போவதில்லை", என்பது அனுபவப் பழமொழி தான். அதுவும் கணவன் மனைவியிடையே நல்ல விசயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகும் போது அது அவர்களின் அன்பை அதிகரிக்கும். பாசத்தை வளர்க்கும். அது காதலாகி பெருகி நிற்கும். அவர்களின் இல்லறம் இனிக்கும்!. எனவே அன்பை விதைப்போம்' அன்பைப் பெருக்குவோம். அன்பால் கூடி ஆசையாய் இணைந்து திகட்டாத பேரின்பத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். அன்பே அனைத்திற்குமான திறவுகோல். இனிக்கும் இல்லறம்!

No comments:
Post a Comment